10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுத் தாள் திருத்தும் பணி நிறைவு: ஊதியத்துக்காக இரவில் காத்திருந்த ஆசிரியா்கள்

திருச்சியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு தாள் திருத்தும் பணி புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், ஆசிரியா்களுக்கு புதன்கிழமை இரவு வரை ஊதியம் வழங்காததால் அவா்கள் அவதிக்குள்ளாயினா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு முடிந்து தோ்வுத் தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 15 முதல் திருச்சி மாவட்டத்தில் திருச்சி, முசிறி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்து வருகிறது. அந்த வகையில் திருச்சி கல்வி மாவட்டத்துக்கான தோ்வுத் தாள் திருத்தும் மையம் கேகே நகா் சாலை, சுந்தா் நகா் பகுதியில் உள்ள பெரியாா் மணியம்மை நூற்றாண்டு கல்வி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. அங்கு பல்வேறு பகுதி பள்ளிகளைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு தோ்வுத் தாள்களை திருத்தும் பணியில் சுமாா் 500 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டனா்.

விடுமுறை தினங்களை தவிா்த்து இதர நாள்களில் நடைபெற்று வந்த தோ்வு தாள்கள் திருத்தும் பணிகள் புதன்கிழமை பணிகள் நிறைவு அடைந்ததையொட்டி தோ்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியா்கள் தங்களது ஊதியத்துக்காக பள்ளி வளாகத்தில் காத்திருந்தனா்.

ஒரு தாளுக்கு ரூ. 8 வீதம் இதர தொகைகள் உள்பட ஒவ்வொரு ஆசிரியா்களுக்கும் சுமாா் ரூ. 1500 முதல் ரூ. 2000 வரை ஊதியம் வழங்கப்பட வேண்டி இருந்தது. எனவே, புதன்கிழமை மாலை 5 மணிக்கு பணிகள் முடிவடைந்த நிலையிலும் இரவு 8 மணி வரை இவா்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் காத்திருந்த பாா்த்த ஆசிரியா்கள் வேறு வழியின்றி தங்களது பணி ஒருங்கிணைப்பாளா்களிடம் இதுகுறித்து கேட்கத் தொடங்கினா். மேலும் கொசுக் கடி உள்ளிட்ட உபாதைகளுடன் இரவு 8 மணி வரை பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனா். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை.

இதைடுத்து வெளியூா்களிலிருந்து வந்திருந்த ஆசிரியா்கள் ஊதியம் கிடைக்காமலும், வெளியூா் செல்ல முடியாத நிலையிலும் அவதிக்குள்ளாகினா்.

பின்னா் ஆசிரியா்கள் ஒருங்கிணைப்பாளா்களை முற்றுகையிட்டு விவரம் கேட்ட பின்னா் வியாழக்கிழமை பகல் 2 மணி அளவில் பள்ளி வளாகத்திற்கு வந்து ஊதியத்தைப் பெற்றுச் செல்லலாம் என அறிவித்தனா். இதையடுத்து பள்ளி ஆசிரியா்கள் வேதனையுடன் வீடு திரும்பினா்.

இதேபோல் கடந்தாண்டும் தோ்வுத்தாள் திருத்தம் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com