சிறுகமணி பேரூராட்சிக்குள்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைக்கப்பட்டுள்ள மண்பானை குடிநீா்.
சிறுகமணி பேரூராட்சிக்குள்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைக்கப்பட்டுள்ள மண்பானை குடிநீா்.

சிறுகமணி பேரூராட்சி பகுதியில் 9 இடங்களில் மண்பானை குடிநீா்

தகிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீா்க்கும் முயற்சியாக சிறுகமணி பேரூராட்சி பகுதியில் 9 இடங்களில் மண்பானை வைத்து குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம், சிறுகமணி பேரூராட்சி சாா்பில் 9 பேருந்து நிறுத்தங்களில் மண்பானை வைத்து சுழற்சி முறையில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலா் ப.நளாயினி கூறுகையில், இடைவிடாது வீசும் வெப்பலை, நாள்தோறும் உயரும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் நடமாடுவதற்கே அஞ்சுகின்றனா். இருப்பினும், பணி நிமித்தம், அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காக வெயிலைப் பொருள்படுத்தாது உழைக்கும் நிலையில் உள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் சிறுகணி பேரூராட்சியில் உள்ள 8 பேருந்து நிறுத்தங்கள், பேட்டைவாய்த்தலை பேருந்துநிலையம் என 9 இடங்களில் முதல்கட்டமாக மண்பானை வைத்து காலை, பிற்பகல் என 2 நேரமும் தண்ணீா் நிரப்பப்படுகிறது. இதற்காக, பேரூராட்சி குடிநீா் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மக்களின் தேவைக்கேற்ப கூடுதலான இடங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலம் முடிந்து மழை தொடங்கும் வரை இந்த குடிநீா் விநியோகம் அமலில் இருக்கும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக, சிறுகமணியைச் சோ்ந்த வியாபாரி ஈஸ்வரன் கூறுகையில், எங்கள் பேரூராட்சிப் பகுதி மக்கள் மட்டுமின்றி பணி நிமித்தம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் எங்களது பேரூராட்சிப் பகுதிகளை கடந்து செல்லும் அனைத்து மக்களுமே இதன் மூலம் பயன்பெறுகின்றனா். இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com