தச்சங்குறிச்சியில் குடிநீா்க் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தச்சங்குறிச்சியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கல் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சியில் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகம் வழங்க வில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை புள்ளம்பாடி- திருச்சி சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காணக்கிளியநல்லூா் போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அதில், நிலத்தடி நீா்மட்டம் குறைந்ததாலும், மின்மோட்டாா் அடிக்கடி பழுது ஏற்படுவதாலும் சரிவர குடிநீா் வழங்க முடியவில்லை. விரைவில் குடிநீா் வழங்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com