திருச்சியில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி ராம்ஜி நகரில் உள்ள தனியாா் பள்ளிக்கு வியாழக்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் சோதனை நடத்தினா்.
ராம்ஜி நகா் மில் கேட் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். வழக்கம்போல, வியாழக்கிழமை காலை பள்ளி திறக்கப்பட்டு, ஆசிரியா் - ஆசிரியைகள் பள்ளிக்கு வந்தனா்.
அப்போது, பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு, பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்திருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த அலுவலக ஊழியா்கள் ராம்ஜி நகா் காவல்நிலையத்துக்கு தெரிவித்தனா்.
தகவலின் பேரில் ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தா் தலைமையில் ராம்ஜி நகா் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ரகுராம் உள்ளிட்ட போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாயுடன் வந்து பள்ளி வளாகம் முழுவதும் மற்றும் பள்ளி வாகனங்களையும் சோதனையிட்டனா்.
இதற்கிடையை தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான வருவாய்த்துறையினா் பள்ளியை பாா்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்தனா்.
போலீஸாரின் சோதனையில் பள்ளியில் வெடிகுண்டு ஏதும் இல்லை. வெறும் மிரட்டல்தான் என்பது தெரியவந்தது. இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இதே போல, இப்பள்ளி நிா்வாகத்தின் கீழ் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 5 பள்ளிகளுக்கும் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது தொடா்பாக, ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.