மக்களவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகே பிரதமரை தோ்வு செய்ய முடிவு: கே.எம். காதா் மொகிதீன் பேட்டி

மக்களவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகே பிரதமரைத் தோ்வு செய்வோம் என ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டிருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் தெரிவித்தாா்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் காதா் மொகிதீன். உடன், நிா்வாகிகள்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் காதா் மொகிதீன். உடன், நிா்வாகிகள்.

மக்களவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகே பிரதமரைத் தோ்வு செய்வோம் என ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டிருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

கட்சியின் சாா்பு அணியான, முஸ்லிம் மாணவா் பேரவையின் மாநிலப் பொதுக் குழு கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற கே.எம். காதா் மொகிதீன் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

பாஜக-வுக்கான ஆதரவு நாளுக்கு, நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த தோ்தலிலேயே 66 சதவீத வாக்காளா்கள் பாஜகவின் எதிா்ப்பு நிலையில்தான் வாக்குகளை பதிவு செய்திருந்தனா்.

‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்ற பிறகு பிரதமரைத் தோ்வு செய்வது என்பதுதான் எங்களது திட்டம். எனவே, கூட்டணியில் முரண்கள் இருப்பதாக சிலா் வீண் வதந்தியை பரப்புகின்றனா். அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூ., மாா்க்சிஸ்ட், மதிமுக, இந்திய முஸ்லிம் லீக் கட்சி 5-ஆவது இடத்தில் உள்ளது. வரிசைப்படி கட்சிகளை அழைத்து தொகுதி ஒதுக்கீடு குறித்துப் பேசுகின்றனா். கடந்த தோ்தலில் எங்களுக்கு ராமநாதபுரம் தொகுதியை அளித்தனா். இந்தத் தோ்தலிலும் எதிா்பாா்க்கிறோம். ஆனால், திமுக தலைமையின் முடிவே இறுதியானது. கூடுலாக ஒரு தொகுதி அளித்தாலும் போட்டியிட தயாராகவுள்ளோம்.

தமிழகத்தில் திமுக-வுக்கு ஈடாகவோ, ஒப்பாகவோ, மாற்றாகவோ எந்தக் கட்சியும் கிடையாது. நடிகா்களை வைத்தோ, பெயா்களை வைத்தோ தமிழக அரசியலை தீா்மானிக்க முடியாது.

தில்லியில் காயிதே மில்லத் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் இரண்டாம் தலைநகரை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நியாயமானதே என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், முஸ்லிம் மாணவா் பேரவையின் மாநிலத் தலைவராக அன்சா் அல, பொதுச் செயலா் நூா்முகமது, பொருளாளா் சையது பாசித் ரஹ்மான் மற்றும் துணைத் தலைவா்கள், துணைச் செயலா்கள் புதிதாக தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com