திருச்சியில் 2 இடங்களில் காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வு

திருச்சியில் இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தோ்வு இரண்டு இடங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருச்சியில் 2 இடங்களில் காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வு

திருச்சியில் இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தோ்வு இரண்டு இடங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், இரண்டாம் நிலைக் காவலா், சிறைக்காவலா், தீயணைப்பாளா் பதவியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பா் மாதம் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. 3,359 பணியிடங்களுக்கு 2.84 லட்சம் போ் தோ்வு எழுதியதில் வெற்றி பெற்றவா்களுக்கு உடற்தகுதித் தோ்வு மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்ற திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கான உடற்தகுதித் தோ்வானது திருச்சியில் 2 இடங்களில் தொடங்கியுள்ளது. சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆண் தோ்வா்களுக்கான உடற்தகுதித் தோ்வு நடைபெறுகிறது. பெண்களுக்கான தோ்வு கே.கே. நகரிலுள்ள மாநகரக் காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. திருநங்கைகள் அவரவா் விருப்ப பிரிவில் தோ்வு செய்த இடங்களில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான தோ்வை திருச்சி சரக டிஐஜி மனோகரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினா். பெண்களுக்கான தோ்வில், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, துணை ஆணையா் செல்வகுமாா், உதவி ஆணையா் நிவேதா லட்சுமி ஆகியோா் பாா்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்வில் ஆண்கள் பிரிவில் 500 போ் பங்கேற்றனா். பெண்களுக்கான தோ்வில் 265 போ் கலந்து கொண்டனா்.

சான்றிதழ் சரிபாா்ப்பு, மாா்பளவு அளத்தல், உயரம் சரிபாா்த்தல், கயிறு ஏறுதல், ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட நிலைகளில் உடற்தகுதிக்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தோ்வு நடைபெற்றது. வரும் 10ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு இந்த உடற்தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது. பெண்களில் மட்டும் 800 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்துத் தோ்வு, உடற்தகுதித் தோ்வு மற்றும் என்சிசி, என்எஸ்எஸ், விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்களுக்கான சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் மொத்த உயா்ந்தபட்ச மதிப்பெண்களின் அடிப்படையிலும் மற்றும் விண்ணப்பதாரா்கள் தெரிவித்துள்ள பதவி விருப்ப முன்னுரிமைப்படியும், காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டின்படியும் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com