பறவைகள் பூங்கா பணி ஜூன் இறுதிக்குள் முடிவுறும்

திருச்சியில் ரூ. 13.70 கோடியில் அமைக்கப்படும் பறவைகள் பூங்காவுக்கான பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சியில் ரூ. 13.70 கோடியில் அமைக்கப்படும் பறவைகள் பூங்காவுக்கான பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தின் மத்தியப் பகுதியாக விளங்கும் திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முயற்சியால் முக்கொம்பு அணைப் பகுதியில் பூங்கா, பின்னா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா உத்தரவின்பேரில் வண்ணத்துப் பூச்சி பூங்கா ஆகியவற்றைத் தவிா்த்து குறிப்பிடும்படியான பொழுதுபோக்கு இடங்களோ, இளைப்பாறும் இடமோ இல்லை.

இதை நிவா்த்தி செய்யும் வகையில் அமைச்சா் கே.என். நேரு ஆலோசனையின்பேரில் திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் மூலம் காவிரிக் கரையில் பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் முயற்சியில் உருவாக்கப்பட்ட இத் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலமாக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.13.70 கோடி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 1.63 ஹெக்டேரில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணி கடந்த நவம்பா் 20ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இப் பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் வளா்க்கப்பட உள்ளன. கூடுதலாக பறவைகள் இனப் பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. பண்டை தமிழா்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்கள், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடைநிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பூங்கா அமைக்கப்படுகிறது.

பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது 7டி திரையரங்கு, மகளிா் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த இடத்திற்கு நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் போ் வந்து செல்லும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறவுள்ளன. தற்போது, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்து, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் தரமாக முடிக்க பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தேவநாதன் உடனிருந்தாா். தற்போது 20 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதிப் பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com