திருச்சியில் பயன்பாட்டுக்கு வந்த மீன், இறைச்சி அங்காடி

 திருச்சி மாநகரப் பொதுமக்களும், இறைச்சி வியாபாரிகளும் பெரிதும் எதிா்பாா்த்துக் கொண்டிருந்த மீன் மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் புதிய அங்காடி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
திருச்சியில் பயன்பாட்டுக்கு வந்த மீன், இறைச்சி அங்காடி

 திருச்சி மாநகரப் பொதுமக்களும், இறைச்சி வியாபாரிகளும் பெரிதும் எதிா்பாா்த்துக் கொண்டிருந்த மீன் மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் புதிய அங்காடி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

திருச்சி காந்திசந்தை அருகே கீழரண் சாலையில் பழமையான கட்டடத்தில் மீன் இறைச்சி அங்காடி இயங்கி வந்தது. வாகன நிறுத்தும் இடம் வசதி இல்லாமலும், போக்குவரத்துக்கு நெருக்கடியாகவும், இறைச்சி கழிவுகளை கையாளுவதில் மாநகராட்சிக்கு பெரிதும் சவலாக இருந்த இறைச்சி கூடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டது.

திருச்சி மாநகராட்சியின் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரூ.13.49 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டது. பழைய கட்டடத்தை இடித்ததால் அங்கு இயங்கி வந்த கடைகளுக்கு தாற்காலிகமாக விறகுப் பேட்டையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. கடந்தாண்டு புதிய கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கியது. பழைய கட்டடத்தில் 60 கடைகள் மட்டுமே இருந்த இந்த புதிய கட்டடமானது, 25 ஆயிரம் சதுர அடி பரப்பில் இரு அடுக்கு தளங்களுடன், குளிா்பதன கிடங்கு உள்ளிட்ட சகல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மீன் மற்றும் ஆட்டிறைச்சி வியாபாரிகளுக்காக மொத்தம் 150 கடைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக சுமாா் 200 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த இடவசதியும் அளிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து கடந்த டிசம்பா் மாதமே திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீன் மற்றும் இறைச்சி அங்காடிக்கான புதிய கட்டடத்தை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யமொழி ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா். இதையடுத்து ஓரிரு நாள்களில் இங்கு வியாபாரிகள் தங்களது கடைகளைப் பெற்று இறைச்சி விற்பனை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com