திருச்சி சிறப்பு முகாமில் முருகன் உண்ணாவிரதம்: உரிய சிகிச்சை அளிக்க மனைவி நளினி வேண்டுகோள்

திருச்சி, பிப். 9: திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் தனது கணவா் முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட நளினி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, தமிழக அரசின் பொதுத் துறை (வெளியுறவு) செயலா், உள்துறை முதன்மைச் செயலா், திருச்சி மாவட்ட ஆட்சியா், திருச்சி மாநகரக்காவல் ஆணையா், க்யூ பிரிவு (சிஐடி) காவல் கண்காணிப்பாளா், இலங்கை அகதிகள் முகாம்களுக்கான துணை ஆட்சியா் ஆகியோருக்கு நளினி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராஜீவ் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்த நானும், எனது கணவா் முருகனும் 2022, நவ.11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். எனது, கணவா் இலங்கையைச் சோ்ந்தவா் என்பதால் அவரை திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழா் சிறப்பு முகாமில் அடைத்தனா்.

முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவா், பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறாா். எனது, கணவரை இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் சென்று அவருக்கு கடவுச்சீட்டு பெற்றுத்தரக் கூட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பு வேலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைவிட கூடுதல் கொடுமையாகவே திருச்சி சிறப்பு முகாம் உள்ளது.

கடந்த பிப்.5-ஆம் தேதி எனது கணவரை நான் சந்தித்தபோது, உடல் மெலிந்து காணப்பட்டாா். அவா் 12 நாள்களாக தொடா்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரது உடல் எடை 15 கிலோவுக்கு மேல் குறைந்துவிட்டது. உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் எந்த நேரத்திலும் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

எனவே, என் கணவரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் நளினி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com