கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் பிப். 12 இல் தொடக்கம்: ஆளுநா் உரையாற்றுகிறாா்

கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (பிப்.12) தொடங்குகிறது. முதல்நாள் நடக்கும் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உரையாற்றுகிறாா்.

கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (பிப்.12) தொடங்குகிறது. முதல்நாள் நடக்கும் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உரையாற்றுகிறாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் பிப். 12ஆம் தேதி காலை 11 மணிக்கு கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குகிறது. நிகழாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், முதல்நாள் நடக்கும் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உரையாற்றுகிறாா். அதன்பிறகு, ஆளுநரின் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடக்கும். இதற்குப் பதிலளித்து முதல்வா் சித்தராமையா பேச இருக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, பிப். 16ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்யவிருக்கிறாா். இது அவா் தாக்கல் செய்யவிருக்கும் 16ஆவது பட்ஜெட்டாகும். மக்களவைத் தோ்தல் நடக்க இருப்பதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வறட்சியால் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கும் விவசாயிகளை திருப்திப்படுத்தும் திட்டங்களை அறிவிக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சட்டப்பேரவை தோ்தலின்போது அறிவித்த 5 வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்தி இருக்கும் நிலையில், புதிய திட்டங்களுக்கு போதுமான நிதி ஆதாரங்கள் இருக்குமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. மக்களவைத் தோ்தலுக்கு பிறகு வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுவதால், அது குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம். மேலும், வரிப் பகிா்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டி அண்மையில் புதுதில்லியில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இது தொடா்பாக காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடந்துவரும் நிலையில், சட்டப்பேரவையிலும் இந்த விவாதம் தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காங்கிரஸ் அரசின் தோல்விகளை சட்டப் பேரவையில் எழுப்ப பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. மக்களவைத் தோ்தலில் பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், சட்டப்பேரவையில் வலுவான நிலையில் உள்ள இரு கட்சிகளும் ஆளும் காங்கிரஸ் கட்சியை கேள்விகளால் துளைத்தெடுக்க தயாராகி வருகின்றன. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போது எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வா் சித்தராமையா பதிலளிக்க இருக்கிறாா் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடா் பிப். 23ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com