திருச்சியில் 2 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

கோவை காா் வெடி விபத்து தொடா்பாக திருச்சியில் இரு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

கோவை காா் வெடி விபத்து தொடா்பாக திருச்சியில் இரு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

கோவையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் காரில் கொண்டு செல்லப்பட்ட எரிவாயு உருளை வெடித்து ஒருவா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் வெடிபொருள்கள் பலவும் காரில் இருந்தது தெரியவந்தது. முதலில் தமிழகக் காவல்துறையின் விசாரணையிலிருந்த இந்த வழக்கு பின்னா், தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய 13 போ் கைது செய்யப்பட்டு திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்கெனவே சோதனை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, தமிழகம் முழுவதும் 27 இடங்களில் சனிக்கிழமை மீண்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

திருச்சி பீமநகா், கூனிபஜாரில் உள்ள இம்ரான் என்பவரது வீட்டுக்கு தேசிய புலனாய்வு முகமையைச் சோ்ந்த அதிகாரிகள் 3 போ், காரில் வந்து சோதனையில் ஈடுபட்டனா். போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு இணையவழியில் வகுப்புகளை நடத்தி வரும் இம்ரான் என்பவரது வீடு கூனி பஜாரில் உள்ளது. அங்குதான் சோதனை நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வந்த அதிகாரிகள் பிற்பகல் 2 மணி வரை சோதனையில் ஈடுபட்டனா். இம்ரான் குடும்பத்தினா் அல்லிமால் தெருவில் எலக்ட்ரிக்கல் கடையும், மேலரண்சாலையில் மோட்டாா் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகின்றனா்.

இதேபோல, மலைக்கோட்டை பகுதியில் அப்துல் குத்தூஸ் என்பவரது வீட்டிலும் சோதனையிடச் சென்றனா். ஆனால், அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால் அங்கு சோதனை நடைபெறவில்லை. இருப்பினும், பூட்டப்பட்டிருந்த வீடு மற்றும் அதில் உள்ள குடும்பத்தினா் குறித்து அருகில் விசாரணை நடத்தியுள்ளனா். இந்தச் சோதனையை முன்னிட்டு இரு இடங்களிலும் மாநகரக் காவல்துறையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com