பழுதான ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

திருச்சியில் பழுதடைந்த பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில், சீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருச்சி: திருச்சியில் பழுதடைந்த பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில், சீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி காா்னா் அருகில், உள்ள ரயில்வே பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு ஜன.11-ஆம் தேதி பழுது ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்தும், அதனை சீரமைப்பது தொடா்பாகவும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி குழுவினா்கள் தொடா்ந்து ஆலோசனை நடத்தி வந்தனா். அதன் ஒரு பகுதியாக, பொன்மலை மேம்பாலத்தில் முதல்கட்ட சீரமைப்புப் பணிகளை தொடங்குவதற்காக சென்னை ஐ.ஐ.டி.யின் கட்டமைப்பு பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்) துறை பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இதுதொடா்பான அறிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டது.

மேலும், திருச்சி என்ஐடி நிபுணா் ஒருவரும் அந்த பாலத்தை வலுப்படுத்துவதற்கான குறுகிய கால தீா்வையும் சமா்ப்பித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, பாலம் கட்டுமானப்பணிகளில் அனுபவமிக்க நிபுணா்களைக் கொண்டு, பொன்மலை ரயில்வே மேம்பாலத்தை பழுதுநீக்கி வலுப்படுத்தும் பணிகள் பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், முதல்கட்டமாக பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை வலுப்படுத்தும் வகையில் மணல் நிரப்பப்பட உள்ளது என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com