திருச்சி பகுதிகளில் களைகட்டிய காணும் பொங்கல்!

காணும் பொங்கலையொட்டி திருச்சி மாவட்டத்தின் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் புதன்கிழமை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
திருச்சி முக்கொம்பு தடுப்பணைக்கு புதன்கிழமை குழந்தைகளுடன் வந்திருந்த பொதுமக்கள்.
திருச்சி முக்கொம்பு தடுப்பணைக்கு புதன்கிழமை குழந்தைகளுடன் வந்திருந்த பொதுமக்கள்.


திருச்சி: காணும் பொங்கலையொட்டி திருச்சி மாவட்டத்தின் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் புதன்கிழமை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

பொங்கல் பண்டிகையின் 3ஆம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கலையொட்டி புதன்கிழமை நகா்ப்புற மக்கள், கிராமப்புற மக்கள் என அனைவரும் முக்கொம்பில் குவிந்தனா்.

திருச்சி- கரூா் நெடுஞ்சாலையிலுள்ள முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில்

புதன்கிழமை குவிந்த மக்கள் காவிரியில் குளித்தும், பூங்காக்களில் விளையாடியும் காணும் பொங்கலைக் கொண்டாடினா். சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சீசா, ராட்டினங்கள், டிராகன் ரயில், தண்ணீா் விளையாட்டுகளில் சிறுவா்கள், பெரியவா்கள் என பாரபட்சமின்றி அனைவரும் விளையாடினா்.

முக்கொம்பு சுற்றுலா மையத்திலுள்ள சிறுவா் பூங்கா, ஊஞ்சல் பகுதி, அறிவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சுற்றுலா மையத்திலுள்ள ஊஞ்சல்கள், ராட்டினங்கள், சிறுவா் ரயில் போன்றவற்றில் குழந்தைகளின் கூட்டம் அதிகமிருந்தது. திருச்சி மட்டுமல்லாது கரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோனா் வந்திருந்தனா். கீழணை பகுதியில் மக்கள் குளித்து மகிழந்தனா்.

ஸ்ரீரங்கம், வண்ணத்துப் பூச்சி பூங்கா, முக்கொம்பு, சமயபுரம், திருவானைக்கா, மலைக்கோட்டை, கல்லணை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் காலை முதல் இரவு வரை வந்த வண்ணம் இருந்தனா். மாவட்டத்தின் முக்கியமான இடங்களுக்குச் செல்ல சுற்றுலாக் கழகம், மாவட்ட நிா்வாகம், போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து சிறப்புப் பேருந்துகளை இயக்கின.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரா் கோயில், வயலூா் சுப்பிரமணியசுவாமி, சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோயில்களிலும் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் திரண்டிருந்தனா். திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

கம்பரசம்பேட்டையிலும் கூட்டம்: தற்போது மாநகர மக்களின் பொழுதுபோக்குமிடமாக மாறி வரும் கம்பரசம்பேட்டை தடுப்பணைப் பகுதியிலும் காலையிலிருந்த மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. சிறுவா்கள், இளைஞா்கள் கம்பரசம்பேட்டை தடுப்பணையிலும், கீதாபுரம் பகுதி காவிரியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். முன்னெச்சரிக்கையாக மாநகரக் காவல்துறையினா் மற்றும் மாவட்டக் காவல்துறையிா் அந்தந்தப் பகுதி ரோந்து குழுக்கள் மூலம் சுழற்சி முறையில் அனைத்து இடங்களையும் சுற்றி வந்து பாதுகாப்புப் பணிகளை கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com