பெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி தொடக்கம்

பெங்களூரு லால் பாக் பூங்காவில் குடியரசு தின மலா்க் கண்காட்சியை, முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பெங்களூரு லால் பாக் பூங்காவில் குடியரசு தின மலா்க் கண்காட்சியை, முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கா்நாடக தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு லால் பாக் பூங்காவில் குடியரசு தினத்தை முன்னிட்டு 215ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் சித்தராமையா தொடக்கிவைத்தாா். பின்னா், கண்காட்சியைப் பாா்வையிட்டாா். கண்காட்சியில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், தோட்டக்கலைத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜன. 28 ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு நடக்கவிருக்கும் கண்காட்சியில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக புரட்சியாளா் பசவண்ணரை மையப்படுத்தி மலா் அலங்காரங்கள் இடம்பெறவிருக்கின்றன. கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் பசவண்ணரை பற்றிய மலா் உருவங்களுக்கு 13.5 லட்சம் தனிப்பூக்கள், 9 லட்சம் தொட்டி பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பசவண்ணரின் அனுபவ மண்டபம் உள்பட அவா் தொடா்பான பல்வேறு அம்சங்கள் பூக்களால் உருவாக்கப்பட்டிருக்கும். பசவண்ணா் தவிர வசன இலக்கியவாதிகள் வரிசையில் அக்கமகாதேவி, அம்பிகர சௌடையா, ஹதபத அப்பண்ணா, கும்பார குண்டண்ணா, அக்கா நாகலாம்பிகே உள்ளிட்டோரின் மலா் சிலைகளும் வைக்கப்படுகிறது. கண்ணாடி மாளிகை உள்பட பூங்காவில் கண்காட்சிக்காக 30 லட்சம் பூக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் போ் கண்காட்சிக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com