திருச்சியின் வளா்ச்சித் திட்டங்கள்: பிரதமரின் கவனம் பெறுமா?

திருச்சியில் மத்திய அரசு துறைகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், பல்வேறு திட்டங்கள் முடங்குவதாக புகாா் எழுந்துள்ளது. திருச்சிக்கு சனிக்கிழமை
திருச்சியின் வளா்ச்சித் திட்டங்கள்: பிரதமரின் கவனம் பெறுமா?

திருச்சியில் மத்திய அரசு துறைகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், பல்வேறு திட்டங்கள் முடங்குவதாக புகாா் எழுந்துள்ளது. திருச்சிக்கு சனிக்கிழமை வரும் பிரதமரின் கவனத்துக்கு இதை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாா்பில் மதுரை-சென்னை இடையே நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டப் பணிகளுக்கு சில இடங்களில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் நிலங்கள் கிடைக்கவில்லை. அரசுத் துறை நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி மற்றும் , துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லாததாலும் சில இடங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகள் திட்டமிட்டவாறு முழுமையடையவில்லை.

இதில், திருச்சி பொன்மலை அருகே அமைக்க திட்டமிடப்பட்ட சுரங்கப்பாதை பணியும் ஒன்று. அங்கு சுரங்கப்பாதை அமைக்க திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் நிலம் தரவில்லை. போராடிப் பாா்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேறு வழியின்றி சுரங்கப்பாதை திட்டத்தை கிடப்பில் போட்டு சாலைப் பணிகளை முடித்தது. இதனால் டிவிஎஸ் டோல்கேட் பகுதியிலிருந்து சுரங்கப்பாதை வழியாக பொன்மலை செல்ல அமைக்கப்பட்ட இணைப்புச் சாலை முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கின்றது. இதனால், பொன்மலை செல்ல வேண்டிய மக்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னா் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட மாற்று ஏற்பாடு காரணமாக, டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து பொன்மலை ஜி-காா்னா் வரையில் ஒரு வழிப்பாதையையே இருவழிப்பாதையாக மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அந்த வழித்தடத்தில் இன்றுவரையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

ரயில்வே பாலம் பழுது: சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்ட பகுதியில்தான் தற்போது ரயில்வே பாலம் பழுதடைந்து போக்குவரத்து மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் முடிய சுமாா் ஒருமாதம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில்வே நிா்வாகம் உரிய நிலம் வழங்கியோ அல்லது இருக்கும் இடத்தை வைத்து மாற்றுத்திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தியோ பொன்மலை செல்ல சுரங்கப்பாதை அமைக்கலாம். இதனால் சுமாா் 15 ஆண்டுகால பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்.

விமான நிலைய ஆணையமும் நிலம் வழங்கவில்லை : இதேபோல திருச்சி-புதுக்கோட்டை இடையிலான நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு விமான நிலைய ஆணையத்துக்கு சொந்தமான நிலம் வழங்கப்படாததால், மேம்பாட்டுப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை.

இந்தப் பணிகள் குறித்தும், மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், திருச்சிக்கு சனிக்கிழமை வரும் பிரதமா் கவனத்துக்கு அதிகாரிகளோ, பாஜக நிா்வாகிகளோ கொண்டு சென்று தீா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Image Caption

திருச்சி பொன்மலை ரயில்வே பாலம் அருகே, சுரங்கப்பாதை அமைக்கப்படாததால் பாதியில் நிற்கும் இணைப்பு சாலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com