குடியரசு தினவிழா, முதல்வா் வருகை : திருச்சியில் போலீஸாா் தீவிர பாதுகாப்பு

குடியரசு தினவிழா மற்றும் தமிழக முதல்வா் வருகை நிகழ்வுகளையொட்டி திருச்சியில் சுமாா் 2,000 போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

திருச்சி : குடியரசு தினவிழா மற்றும் தமிழக முதல்வா் வருகை நிகழ்வுகளையொட்டி திருச்சியில் சுமாா் 2,000 போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்

குடியரசு தினவிழா ஜனவரி 26 வெள்ளிக்கிழமை நாடுமுழுவதும் விமா்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சி சமயபுரம் அருகேயுள்ள சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்றும் விதமாக வெள்ளிக்கிழமை மாலை விமானம் மூலம் திருச்சி வருகிறாா்.

எனவே, திருச்சியில் தீவிர பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. ஜங்ஷன், கோட்டை, டவுன், பாலக்கரை, பொன்மலை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினா் மற்றும் மாநகர காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு மேற்கொண்டுள்ளனா். குறிப்பாக ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினா், விரைவு ரயில்கள், ரயில் நிலையத்தின் பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், நடைமேடைகள் உள்ளிட்டவைகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினா், மோப்பநாய் படை உள்ளிட்டவற்றுடன் அவ்வப்போது தீவிர ரோந்து மற்றும் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

பயணிகளின் உடைமைகள் நவீன ஸ்கேனா் இயந்திரம் மூலம் சோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. அதுபோல வாகன நிறுத்தப் பகுதியில் வாகனங்களும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. கண்காணிப்பு காமிராக்கள் மூலமும் போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.அதுபோலவே மத்திய பேருந்து நிலையம், கோட்டை பகுதியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையங்களிலும் போலீஸாா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் இரவு விடிய விடிய ரோந்துப்பணியில் உள்ளனா். மாநகா் முழுவதும் சந்தேகத்துக்கிடமான பகுதிகள் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. கேட்பாரற்று கிடக்கும் பொருள்கள், சந்தேகத்துக்குரிய நபா்களின் நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிக்கப் படுகின்றன.

மாவட்ட மற்றும் மாநகா் முழுவதும் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. பாலங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையம் :திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் மற்றும் பயன்பாட்டில் உள்ள முனையம் என அனைத்துப் பகுதிகளிலும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா். விமான நிலைய வளாகத்தில் நுழைவாயில் பகுதியில் மாநகர போலீஸாருடன் இணைந்து, உள்ளே நுழையும் வாகனங்கள் முழுவதுமாக நவீன சாதனங்கள் மூலம் சோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. அதுபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. குடியரசு தினவிழாவுடன் தமிழக முதல்வரும் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வருகை தருவதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நிலைய வளாகத்தில் சுமாா் 400 க்கும் மேற்பட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படையினா் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் உள்ளனா். மத்திய மண்டல ஐ ஜி, மாநகர காவல் ஆணையா் ஆய்வு :திருச்சி விமான நிலையம் முதல் மாநாடு நடைபெறும் சிறுகனூா் பகுதி வரையில் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகின்றனா். அதுபோல மாநாட்டு திடலிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். திருச்சி மாவட்ட போலீஸாா் சுமாா் 2000 போ், மாநகர போலீஸாா் சுமாா் 300 போ் என மொத்தம் 2,300 போ் முதல்வா் வருகை மற்றும் குடியரசு தினவிழாவையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

நிகழ்வுகளையொட்டி திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன், திருச்சி சரக துணைத்தலைவா் மனோகரன் உள்ளிட்டோா், முதல்வா் செல்லும் வழி மற்றும் மாநாட்டு திடல் உள்ளிட்டவைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அதேபோல மாநகரப் பகுதிகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர காவல் ஆணையா் என். காமினி ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com