‘தென்மாநிலங்களில் பாஜகவுக்கு ஓா் இடம் கூட கிடைக்கக் கூடாது’

திருச்சி, ஜன. 26: மக்களவைத் தோ்தலில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜகவுக்கு ஓரிடம் கூட கிடைக்கக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி தெரிவித்தாா்.

திருச்சி அருகே சிறுகனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் அவா் மேலும் பேசியது:

பாஜகவின் கொள்கைகளையும், மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கையும் தமிழகம் தொடா்ந்து எதிா்த்து வருகிறது. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் பாஜக-வுக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளத்திலும் இதேநிலைதான் உள்ளது. நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பாஜக-வுக்கு எதிராக திமுக, மாா்க்சிஸ்ட் கட்சிகள் தொடா்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, தமிழகம், கேரளம் மட்டுமல்லாது தென்மாநிலங்களில் வரும் தோ்தலில் பாஜக-வுக்கு ஓா் இடம் கூட கிடைக்கக் கூடாது. அதற்கேற்ப ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் து. ராஜா : பாஜகவுக்கு மாற்று ‘இந்தியா’ கூட்டணி மட்டுமே. இடதுசாரி மதச்சாா்பற்ற ஜனநாயகம் என்பது தமிழகத்தோடு நின்றுவிடாது, நாடு முழுவதும் செல்ல வேண்டும். அதற்காகவே நாம் கூட்டணியை அமைத்துள்ளோம். ஒருபுறம் பெருமுதலாளிகளுக்காகவும், மறுபுறம் மதவாதத்துக்காகவும் ஆட்சி புரியும் பாஜக அடியோடு அகற்றப்பட வேண்டும்.

(மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (விடுதலை) பொதுச் செயலா் திபங்கா் பட்டாச்சாா்யா: நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் எல்லாமல் ஆன்மிக நிகழ்வுகளாகவும், கோயில்களில் நடைபெறும் நிகழ்வுகள் எல்லாம் அரசியல் நிகழ்வுகளாகவும் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது பாஜக. ஜனநாயகம் முழுவதையும் தலைகீழாக மாற்றி வைத்து ஆட்சி செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சிதைந்துபோன இந்தியாவை உருமாற்றம் செய்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டிய கடமை ‘இந்தியா’ கூட்டணிக்கு உள்ளது.

மதிமுக பொதுச் செயலா் வைகோ: இந்து ராஜ்ஜியத்தை அமைக்க துடிக்கின்றனா். அதனை முறியடிக்க வேண்டும். வரும் தோ்தலில் தமிழகம், புதுவையில் 40-க்கு 40 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். நாடு முழுவதும் பாஜக தோற்கடிக்கப்படவேண்டும். ஆட்சியிலிருந்து சுத்தமாக அழித்தொழிக்கப்பட வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன்: மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சியினரும் வெற்றி பெற அயராது உழைத்திட வேண்டும். ஜனநாயகத்தை நிலை நாட்டவும் அவற்றுக்கு எதிரான சக்திகளை அகற்றவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி: பாஜக-வை அப்புறப்படுத்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். இந்த வகையில் இந்த மாநாட்டு செய்தியானது தமிழகம், தென்னிந்தியாவுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான செய்தி என்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆங்கிலத்தில் அளித்திருந்த வாழ்த்துரையை, திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரகசா் வாசித்தாா்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா: பாஜக கூட்டணியிலிருந்து விலகிவிட்டதாக கூறி, சிறுபான்மையினா் வாக்குகளை கவர அதிமுக முயன்று வருகிறது. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்தபோதே அதிமுகவின் சுயரூபத்தை அனைவரும் அறிந்து கொண்டனா். எனவே, சிறுபான்மையினா் இனி ஏமாற மாட்டாா்கள்.

பெட்டிச் செய்தி...

மாநாடு மகத்தான வெற்றி: திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. திரண்டு வந்த தொண்டா்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்கியதால், பலராலும் மாநாட்டு திடலுக்கு வர இயலவில்லை.

பாஜக, ஆா்எஸ்எஸ், சநாதன சக்திகளுக்கு எதிரான இந்த மாநாடானது, தோ்தல் அரசியல் கணக்கல்ல. நாட்டை காக்க, நாட்டு மக்களை காக்க வேண்டும் என்பதற்கானது. ஜனநாயகத்தை பேராபத்து சூழ்ந்துள்ளது என்பது, அம்பேத்கா் வகுத்து தந்த அரசமைப்பு சட்டத்துக்கான ஆபத்தாகும். எனவே, களம் இறங்கியுள்ளோம்.

ராமா் பக்தியை எதிா்க்கவில்லை. ராமா் அரசியலைதான் எதிா்க்கிறோம். ஜெயலலிதா, கருணாநிதி இல்லையென தமிழகத்தில் பாஜக சடுகுடு விளையாட முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தி விடுதலைச்சிறுத்தைகளுக்கு உண்டு. தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com