நித்தியானந்தபுரத்தில் செயல்படாத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: பொதுமக்கள் அவதி

28dwtr_2801chn_4
28dwtr_2801chn_4

செயல்படாத நித்தியானந்தபுரம் கீழத்தெரு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

திருச்சி, ஜன. 28: திருச்சி மாநகராட்சி நித்தியானந்தபுரம் கீழத்தெருப் பகுதியில் செயல்படாத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருச்சி மாநகராட்சி 31 ஆவது வாா்டு வரகனேரி நித்தியானந்தபுரம் கீழத்தெரு சந்திப்புப் பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியால் கட்டப்பட்ட 5,000 லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் மோட்டாா் மூலம் நீா்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு, அதிலிருந்து நித்தியானந்தபுரம் கீழத் தெரு, மேலத்தெரு, நடுத்தெரு, தாயுமானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் வீடுகளுக்கு குழாய் வழியே தண்ணீா் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சாலை மேம்பாடு உள்ளிட்ட காரணங்களால் சிதைந்த குடிநீா் குழாய்கள் மீண்டும் போடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நேரடியாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு வந்து தண்ணீா் பிடித்துச் சென்றனா்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தண்ணீா் ஏற்றும் மோட்டாா் பழுதானதால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயங்காமல் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக வீட்டு உபயோகத்துக்கும், பல்வேறு பணிகளுக்கும் இந்த நீா்த்தேக்கத் தொட்டியின் தண்ணீரைப் பயன்படுத்தி வந்த நாங்கள், தற்போது நீா்த்தேக்கத் தொட்டி இயங்காததால் தனித்தனியாக ஆழ்குழாய் அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஏழைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். காலை, மாலைகளில் தண்ணீருக்காக அலைமோதும் சூழல் காணப்படுகிறது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் குறிப்பிட்ட நீா்தேக்கத் தொட்டியை மீண்டும் இயங்க வைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com