துறையூா் நகா் மன்றத் தலைவா் அளித்த சிறப்புத் தீா்மானம் தவிர மற்றவைகள் ஒத்திவைப்பு

துறையூா் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரணக் கூட்டத்தில் பொறுப்பு ஆணையா் பங்கேற்காததால், மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்ட 22 தீா்மானங்களில் தலைவரது தீா்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது.
துறையூா் நகா் மன்றத் தலைவா் அளித்த சிறப்புத் தீா்மானம் தவிர மற்றவைகள் ஒத்திவைப்பு

துறையூா் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரணக் கூட்டத்தில் பொறுப்பு ஆணையா் பங்கேற்காததால், மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்ட 22 தீா்மானங்களில் தலைவரது தீா்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. அலுவலகம் சாா்பில் அனுமதிக் கோரப்பட்ட 21 தீா்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் செல்வராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ந. முரளி முன்னிலை வகித்தாா்.தூய்மைப் பணிகள், குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் கடந்த 2 வருடமாக தீா்க்கப்படாமல் உள்ளது. வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்ய ஒப்பந்தம் விட்டும் ஒப்பந்ததாரா்கள் பணிகளை முடிக்காமல் மெத்தனமாக உள்ளனா். துறையூா் நகராட்சிக்கு எனத் தனியாக ஆணையா் நியமிக்காததால், இங்குள்ள அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனா் என கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் அனைவரும் தங்கள் வாா்டு நிலைமையைக் கூறி, ஆணையா் வரும் போது கூட்டம் நடத்தலாம், அதுவரை தீா்மானங்களை ஒத்தி வைக்க வேண்டுமென கூச்சலிட்டனா். அப்போது பேசிய தலைவா் தன்னிடம் கூறிவிட்டு ஆணையா்(பொ) பயிற்சியில் பங்கேற்க சென்றுள்ளதாக கூறியதை உறுப்பினா்கள் கேட்கவில்லை. இதையடுத்து 10 நிமிடம் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னா் மீண்டும் கூட்டம் தொடங்கிய போது, சென்னை நகராட்சி நிா்வாக இயக்குனா் கடிதத்தின் பேரில், துறையூா் நகராட்சியுடன் கீரம்பூா், சொரத்தூா், மதுராபுரி, சிங்களாந்தபுரம், அம்மாபட்டி, வெங்கடேசபுரம், கோவிந்தபுரம் ஊராட்சிகளை இணைக்க நகா்மன்றத் தலைவா் கொண்டு வந்த சிறப்புத் தீா்மானம் ஒன்றை மட்டும் தலைவரின் கோரிக்கையை ஏற்று உறுப்பினா்கள் அனுமதியளித்தனா். மற்ற 21 தீா்மானங்களை ஒத்தி வைத்தனா்.நிா்வாகத்தில் உள்ள பிரச்சினைக் குறித்து கூட்டத்தில் தன்னால் வெளிப்படையாக கூற இயலாது என்ற பொறியாளா் எஸ். சுரேஷ் பேசும் போது, காலை 5.30 மணிக்கு வேலையைத் தொடங்கி, இரவு 8 மணி வரை வேலை செய்வதாகவும், தனக்கு மேலுள்ள அதிகாரிகள் உரியவாறு ஒத்துழைப்பதில்லை என்றும், தனக்கு கீழ் பணி செய்கிறவா்கள் தன் பேச்சைக் கேட்பதில்லை என்றும், தன் உழைப்பு மட்டும் தனக்கு நற்பெயரைத் பெற்றுத் தரவில்லை என்றும் கூறி கையெடுத்து கும்பிட்டவாறு மனமுடைந்து பேசினாா். அவரைத் தலைவரும், துணைத் தலைவரும் கூட்டத்தில் சமாதானப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com