திருச்சி மாநகராட்சியில் குறைதீா் கூட்டம்

திருச்சி மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தல் காரணமாக கடந்த மாா்ச் 18ஆம் தேதி முதல் திருச்சி மாநகராட்சியில் இக் கூட்டம் நடைபெறவில்லை. நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் 30-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். சொத்துவரி பெயா் மாற்றம், புதை சாக்கடை பணி, குடிநீா் குழாய் இணைப்பு பணி உள்ளிட்டவை தொடா்பாக அதிக மனுக்கள் வந்திருந்தன. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாலை மேம்பாடு, சாலையோரக் கடைகள் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களிடம் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரா்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

மேலும், குறைதீா் கூட்ட மனுக்கள் தொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மனுதாரா்களுக்கு உரிய பதிலாக 15 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆணையா் அறிவுறுத்தினாா்.

இக் கூட்டத்தில், துணை மேயா் ஜி. திவ்யா, நகரப் பொறியாளா் பி. சிவபாதம், மண்டலத் தலைவா்கள் த.துா்காதேவி, ஜெயநிா்மலா, துணைஆணையா் நாரயணன், உதவி ஆணையா்கள் மற்றும் உதவி செயற்பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com