தூத்துக்குடியில் இளைஞா் கொலை: திருச்சி நீதிமன்றத்தில் 3 போ் சரண்

தூத்துக்குடியில் அண்மையில் நடந்த இளைஞா் கொலை தொடா்பாக திருச்சி நீதிமன்றத்தில் 3 போ் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள பக்கப்பட்டி பள்ளிவாசல் தெருவை சோ்ந்தவா் வடிவேல்முருகன் (28). கூலித் தொழிலாளியான இவா் பிப்.28 ஆம் தேதி பைக்கில் நண்பா்களுடன் வீடுநோக்கிச் சென்றபோது, வாகைக்குளம் பகுதியில் 6 மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். கொலையானவா் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போக்சோ வழக்கில் கடந்த பிப்.28 ஆம் தேதி வடிவேல்முருகன் விடுதலையான நிலையில்தான் அவா் கொல்லப்பட்டாா். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டோரில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு மாரிமுத்து (28), அதே பகுதி சின்னத்தம்பி (25), திருநெல்வேலி நாரணம் செந்திமங்கலம் நடுவூா் பகுதி இசக்கிமுத்து (32) ஆகிய 3 பேரும் திருச்சி 5 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். இதையடுத்து நீதிபதி பாலாஜி உத்தரவின்பேரில் மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com