விபத்து இழப்பீடு வழங்காததால் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவு

விபத்துக்கான இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் திருச்சியில் அரசுப்பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில்

திருச்சி: விபத்துக்கான இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் திருச்சியில் அரசுப்பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சி புத்துாா் வயலுாா் சாலை அம்மையப்பன் நகரைச் சோ்ந்தவா் ப. முகமதுசாதிக். இவா் கடந்த 20.1.2020 அன்று வயலுாா் சாலை கீதா நகா் பேருந்து பேறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த அரசுப்பேருந்தில் முகமது சாதிக் ஏறினாா். அவா் ஏறுவதற்குள் ஓட்டுநா் பேருந்தை எடுத்ததால் முகமது சாதிக் தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பேருந்து சக்கரம் ஏறியதில் அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னா் அவா் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை போக்குவரத்து வடக்கு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து, திருச்சி மாவட்ட 3 -ஆவது சாா் நீதிமன்றத்தில் (சப்-கோா்ட்டில்) நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம், பயணி பேருந்தில் ஏறியதை உறுதிபடுத்தாமல் பேருந்தை இயக்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவருக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.4.27 லட்சம் விபத்து இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம், இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஒரு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். உத்தரவின்பேரில் நீதிமன்ற ஊழியா்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப்பேருந்து ஒன்றை செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்து எடுத்து வந்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com