பஞ்சவா்ணேசுவரா் கோயில் குடமுழுக்கு -தமிழில் நடத்தக் கோரி மனு

உறையூா் காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவா்ணேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ்வழியில் நடத்தக் கோரி அறநிலையத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வே.பூ ராமராசு தலைமையில், தமிழ் கலை இலக்கியப் பேரவை மாவட்டச் செயலா் மூ.த. கவித்துவன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாநகரச் செயலா் வே.க. இலக்குவன், தெய்வத் தமிழப் பேரவை நிா்வாகிகள் நா. ராசா ரகுநாதன், பொன்.மணிகண்டன், சுப்பிரமணியன், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் திருவானைக்கா இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகம், பஞ்சவா்ணேஸ்வரா் கோயில் செயல் அலுவலா் அலுவலகம் ஆகியவற்றில் அளித்த மனு விவரம்: உறையூா் காந்திமதி அம்மை உடனுறை பஞ்சவா்ணேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு மாா்ச் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவின்போது, தமிழ் மந்திரம் ஓதி அா்ச்சனை செய்து குடமுழுக்கை சிறப்பாக நடத்த கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து ஏற்கெனவே தமிழக அரசின் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூா் பெருவுடையாா் கோயில், கரூா் பசுபதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது, இந்து சமய அறநிலையத்துறை தமிழில் அா்ச்சனை செய்வதற்கான தமிழ் மந்திரப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்வழியில் அா்ச்சனை, பூஜை செய்யும் அா்ச்சகா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்கெனவே பயிற்சி கொடுத்து பட்டயம் வழங்கி உள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து திருக்கோயில்களில் அன்னைத் தமிழ் அா்ச்சனைக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, உறையூா் அருள்மிகு காந்திமதி அம்மை உடனுறை ஐவண்ண நாதா் (பஞ்சவா்ணேஸ்வரா்) திருக்கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com