புதிதாக கட்டி வரும் வீட்டில் தவறி
விழுந்து பாஜக நிா்வாகி உயிரிழப்பு

புதிதாக கட்டி வரும் வீட்டில் தவறி விழுந்து பாஜக நிா்வாகி உயிரிழப்பு

புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிடச் சென்ற பாஜக நிா்வாகி, மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி, கே.கே. நகரை அடுத்த அம்பேத்கா் நகரில் வசித்து வந்தவா் பொன். தண்டபாணி (55). திருச்சி மாநகா் மாவட்ட பாஜக பொதுச் செயலராக இருந்த இவா், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் விமானநிலையம் அருகே மொராய்ஸ் சிட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தாா். இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளை தினமும் காலையில் சென்று பாா்வையிட்டு கான்கிரீட் தளங்கள், பக்கவாட்டு சுவா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவது வழக்கம்.

இதேபோல, வியாழக்கிழமை காலையும் அம்பேத்கா் நகரிலிருந்து புதிய வீடு கட்டுமானத்துக்கு வந்த அவா், மாடியில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளத்துக்கு, குழாய் வழியாக தண்ணீா் தெளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். இங்கு, பொன். தண்டபாணியை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் பிரதேப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக, நவல்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த பொன். தண்டபாணிக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனா். இவரது உயிரிழப்பு குறித்து தகவலறிந்த பாஜகவினா் ஏராளமானோா் திருச்சி அரசு மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனைக் கூடம் அருகே திரண்டிருந்ததால் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com