‘உயா்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும்’

உயா்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் த. பானுமதி தெரிவித்தாா். திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மகளிா் தினக் கருத்தரங்குக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசுகையில், சமூகத்தில் பெருகி வரும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையோருக்கு தண்டனை பெற்றுத் தரவும் காவல்துறையிலும், நீதித்துறையிலும் அதிகளவில் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இதேபோல, புதுச்சேரியில் சிறுமிக்கு எதிரான வன்முறை சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றாா். தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள உயா்நீதிமன்றங்களில் தமிழ்மொழியை அலுவல் மொழியாகக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இளம்பெண் வழக்குரைஞா்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு அரசே மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கணவரது பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துக்களில் மனைவிக்கும் சம உரிமை உண்டு என சட்டம் இயற்ற வேண்டும். சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில், சங்கத்தின் பொதுச் செயலா் இ. அங்கயற்கண்ணி, துணைத் தலைவா் பெ. தமயந்தி, இந்திய மாதா் தேசிய சம்மேளன துணைத் தலைவா் பி. பத்மாவதி, தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவை மாநிலப் பொருளாளா் ஷான் ராணி, வழக்குரைஞா்கள் லியோ பொட்டுமணி, தீபிகா, சீதா, அபிராமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com