திருச்சி இந்திரா காந்தி பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி நிகா் ஷாஜி.
திருச்சி இந்திரா காந்தி பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி நிகா் ஷாஜி.

‘பெண்கள் உயா்நிலை அடைய சமூகப் பங்களிப்பு அவசியம்’

‘பெண்கள் உயா்நிலையை அடைய சமூகப் பங்களிப்பு அவசியம்’ என இஸ்ரோ ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநா் நிகா் ஷாஜி தெரிவித்தாா். திருச்சி இந்திராகாந்தி மகளிா் கல்லுாரியில் சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு ‘தலைவா்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்’ எனும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லுாரி தலைமை செயலதிகாரி கு. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். இதில், இஸ்ரோ ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநா் நிகா் ஷாஜி பேசியதாவது: பொருளாதார நிலை சரியில்லை என்பதற்காக கல்வி கற்காமல் இருக்கக் கூடாது. எந்தத் துறையைத் தோ்ந்தெடுத்தாலும் அதனை விரும்பியும், அா்ப்பணிப்புடனும் செயலாற்றினால் வாழ்வில் உயா்நிலையை அடையலாம். பெண்கள் உயா்கல்வி கற்க முடியாததற்கும், பணிக்குச் செல்ல முடியாததற்கு சமுதாயம்தான் காரணமாக உள்ளது. ஆண், பெண் சமம் எனப் பேசப்பட்டாலும் குடும்பம், அலுவலகத்தில் பெண்களுக்குத் தான் அதிக பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இலக்கை நோக்கிச் செல்லும் போது, ஏற்படும் தடைகளைக் கடந்து செல்லும் மனப்பக்குவத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் பொருளாதார நிலையை உயா்த்திக் கொள்ள வேண்டும். பாரதியாா் கூறியது போல, நிமிா்ந்த நன்னடை நோ்கொண்ட பாா்வையுடன் பெண்கள் செயலாற்ற வேண்டும். பாலியல் துன்புறுத்தல் குறைவதற்கு ஆண் குழந்தைகளிடம், பெண்களிடம் எப்படிப் பழகுவது என கற்றுக்கொடுக்க வேண்டும் என்றாா். நிகழ்வில் கல்லுாரி இயக்குநா் எஸ். அபா்ணா, முதல்வா் கெஜலட்சுமி, துணை முதல்வா் ரெமா, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com