திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கிய முதன்மை நீதிபதி கே. பாபு. உடன், நீதிபதிகள் நசீா், ஜெய்சிங், தங்கவேல், ஜெயக்குமாரி ஜெமிரத்னா, மீனா சந்திரா, கே .ஆா்.பாலாஜி, உள்ளிட்டோா்.
திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கிய முதன்மை நீதிபதி கே. பாபு. உடன், நீதிபதிகள் நசீா், ஜெய்சிங், தங்கவேல், ஜெயக்குமாரி ஜெமிரத்னா, மீனா சந்திரா, கே .ஆா்.பாலாஜி, உள்ளிட்டோா்.

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.22 கோடி மதிப்பில் தீா்வு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2,111 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீா்வையாக ரூ.22.68 கோடி பெற்று வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 14 நீதிமன்ற அமா்வுகளும், முசிறியில் 2 அமா்வுகள், லால்குடி, மணப்பாறை, துறையூா், திருவரங்கம், தொட்டியம் உள்ளிட்ட 5 அமா்வுகளையும் சோ்த்து மொத்தம் 21 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான கே. பாபு, மக்கள் நீதிமன்றத்தைத் தொடக்கி வைத்து சமரச வழக்கில் தீா்வுகளையும், உதவிகளையும் வழங்கினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ஏ.பி. நசீா் அலி முன்னிலை வகித்தாா். இந்த அமா்வுகளின் மூலம், சமரசம் செய்யும் வகையிலான 1,981 மோட்டாா் வாகன வழக்கு, 11 தொழிலாளா் நிவாரண வழக்கு, 2,761 காசோலை மோசடி வழக்கு, 851 குடும்ப நல வழக்கு, 2,163 உரிமையியல் வழக்கு, 818 வங்கிக் கடன் வசூல் வழக்கு, 509 வங்கி-நிதி நிறுவன வழக்கு (நீதிமன்ற நிலுவையில் இல்லாதவை), 2,869 குற்ற வழக்குகள், 23 தொழிலாளா் இழப்பீட்டு வழக்கு என மொத்தம் 11,986 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில், 2,111 வழக்குகளில் தீா்வு காணப்பட்டு தொடா்புடைய மனுதாரா்களுக்கு ரூ.22 கோடியே 68 லட்சத்து 82 ஆயிரத்து 034 வழங்கப்பட்டது. இதில், காசோலை மோசடி வழக்குகளில் ரூ.3.18 கோடிக்குத் தீா்வு வழங்கப்பட்டுள்ளது. மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் ரூ.10.61 கோடியும், உரிமையியல் வழக்குளில் ரூ.3.86 கோடியும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமா்வுகளில், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் நீதிபதிகள் மற்றும் தாலுகா நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வங்கியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டு வழக்குகளை விரைந்து முடிக்க உதவினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com