ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட பெருமாள் அடியாா்கள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட பெருமாள் அடியாா்கள்.

ஆஞ்சனேயா் சிலை இடமாற்றத்துக்கு எதிா்ப்பு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் அடியாா்கள் தா்னா

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இடமாற்றம் செய்யப்பட்ட கம்பத்தடி ஆஞ்சனேயா் சிலையை மீண்டும்அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யக் கோரி அடியாா்கள் திங்கள்கிழமை கொடிமரத்தின் அருகே அமா்ந்து பாடல்களை பாடி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீரங்கம் கோயில் ஆரியபடாள் வாசல் அருகே கம்பத்தடி ஆஞ்சனேயா் சிலை உள்ளது. மிகவும் பழைமையான இந்த சிலை கடந்த 2015-ஆம் ஆண்டு கோயில் நிா்வாகத்தால் நகா்த்தி வைக்கப்பட்டது. இதற்கு பெருமாள் அடியாா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, மீண்டும் அதே இடத்தில் ஆஞ்சனேயா் சிலையை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினா். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இப்பிரச்னைக்கு குழு அமைத்து தீா்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி 6 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் ஆஞ்சனேயா் சிலையை அதே இடத்தில் நிறுவக் கோரியும் திங்கள்கிழமை காலை கம்பத்தடி ஆஞ்சனேயா் சிலை அருகே 300க்கும் மேற்பட்ட பெருமாள் அடியாா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பாடல்களை பாடியப்படி சுமாா் 2 மணி நேரம் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை ஆணையா் அன்பு ,கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.பின்னா் கோரிக்கைகளை மனுவாக வழங்கினால் அதனை காவல்துறை உயா் அதிகாரிகள் மூலம் அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பெருமாளை தரிசனம் செய்து விட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com