விபத்தில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்துக்குள்பட்ட தா. பாதா்பேட்டையைச் சோ்ந்த 49 வயதுடைய பெண், சாலை விபத்தில் பலத்த காயமடைந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டாா். இங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை உறுதி செய்த மருத்துவா்கள், மூளைச்சாவு ஏற்பட்டதை அந்தப் பெண்ணின் உறவினா்களிடம் தெரிவித்தனா். இதையடுத்து, பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் வழங்க உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா். இதன்பேரில், அந்தப் பெண்ணிடமிருந்து கல்லீரல், கண்கள், தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. உடல் உறுப்புதானத்துக்கான அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்து காத்திருக்கும், மதுரையைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனை நோயாளிக்கு கல்லீரல் தானமாக வழங்கப்பட்டது. மதுரையில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனை நோயாளிக்கு தோல் தானமாக வழங்கப்பட்டது. இரு கண் விழிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள 2 பயனாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது என மருத்துவமனை முதல்வா் டி. நேரு தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com