சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருச்சியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியாா் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி: திருச்சியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியாா் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பா.ஜான்மேக்சின்(40). தனியாா் நிறுவன ஊழியா். இவா், அதேபகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கு, கடந்த 2018 மே 1-ஆம் தேதி முதல் சில மாதங்கள் தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருச்சி கண்டோன்மென்ட் மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, 2020 செப்டம்பா் 8 -ஆம் தேதி மேக்சினை கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து ஜான்மேக்சினுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், இதை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக எம்.கே. ஜாகிா்உசேன் ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com