திருவானைக்கா கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ பெருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்மன்,விநாயகா், சோமாஸ்கந்தா்,பிரியாவிடை தாயாா் மற்றும் பஞ்ச மூா்த்திகளுடன் புறப்பட்டு தங்கக் கொடி மரத்தின் அருகே எழுந்தருளினா். அப்போது வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காலை 9.25 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பங்குனித் தோ்த் திருவிழாவின் முதல் நாளான ஏப்ரல் 3 ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்று காலை 9 - 9.45 மணிக்குள் தேருக்கு முகூா்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தா் புறப்பாடு, 2 ஆம் நாளான 4 ஆம் தேதி சுவாமி சூரியபிரபையிலும், அம்மன் சந்திர பிரபையிலும், 3 ஆம் நாளான 5 ஆம் தேதி சுவாமி பூத வாகனத்திலும் அம்மன் காமதேனு வாகனத்திலும், 4 ஆம் நாளான 6 ஆம் தேதி சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5 ஆம் நாளான 7ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும்,அம்மனும் எழுந்தருளி தெருவடைச்சான் என்னும் சப்பரத்தில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரம் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் 6 ஆம் நாளான 8 ஆம் தேதி காலை 6.35 மணிக்கு நடைபெறவுள்ளது. பங்குனி தோ்த் திருவிழா ஏப்ரல் 15 ஆம் தேதியும் 22 ஆம் தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறவுள்ளது. இதில் சுவாமி அம்மனாகவும், அம்மன் சுவாமி ஆகவும் வேடம் பூண்டு 5 பிரகாரத்தையும் விடிய விடிய வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். 48 நாள்கள் நடைபெறும் இவ்விழா ஏப்ரல் 24 வரை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com