மலேசிய குடும்பத்தினரின் கடவுச்சீட்டை எரித்த தம்பதி கைது

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் மலேசிய குடும்பத்தினரின் கடவுச்சீட்டை எரித்த உணவக ஊழியா்களான தம்பதியினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மலேசியாவைச் சோ்ந்தவா் சந்திரன் (62). இவரது மனைவி வனிதா. இவா்களது மகள் பிரித்திகாவுக்கு (14) அண்மையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து புதுச்சேரியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற மனைவி, மகள் மற்றும் உறவினா் மூவருடன் சனிக்கிழமை திருச்சிக்கு விமானம் மூலம் சந்திரன் வந்தாா். இதைத் தொடா்ந்து காா் மூலம் சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டி சாய்பாபா கோயிலுக்கு சென்ற அவா்கள் பின்னா் சமயபுரம் சுங்கச்சாவடி அருகிலுள்ள உணவகத்தில் சாப்பிட்ட பின்னா் காரைக்குடியிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றனா். அங்கு சென்ற பிறகே மலேசியாவிலிருந்து தான் கொண்டு வந்த பையை உணவகத்திலேயே தவறவிட்டுச் சென்றது சந்திரனுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த சமயபுரம் போலீஸாா் உணவக கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினா். அதில் அந்த உணவகத்தில் வேலைபாா்த்து வந்த சமயபுரம் சோலை நகரைச் சோ்ந்த அலெக்ஸ் (37), இவரது மனைவி அலமலு (34) ஆகிய இருவரும் சந்திரனின் பையை எடுத்தது தெரிய வந்தது. தொடா் விசாரணையில் பையிலிருந்த 250 வெள்ளிக்காசு, அரை பவுன் தங்க நகை ஆகியவற்றை தம்பதி எடுத்துக் கொண்டு, அதிலிருந்த கடவுச்சீட்டை எரித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com