மாரியம்மன் கோயிலில் மாயமான காந்தி சிலையை மீட்க வேண்டும்

திருச்சி வரகனேரி முத்துக்கண் மாரியம்மன் கோயிலில் இருந்து மாயமான காந்தி சிலையை மீட்டு, திரும்ப நிறுவ வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அமைச்சரிடம் இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தினா் அளித்த மனு விவரம்: திருச்சி காந்தி சந்தை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வரகனேரி நித்தியானந்தபுரம் வடக்குத் தெருவில் உள்ள சுமாா் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முத்துக்கண் மாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி திருச்சிக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், வரகனேரி மக்களால், தடியுடன் கூடிய முழு வெள்ளை நிறத்திலான காந்தியின் சிலை இக்கோயிலின் முகப்பில் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக இருந்தது. இந்நிலையில் இக்கோயிலில் திருப்பணிகள் செய்து, கடந்தாண்டு இறுதியில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், இங்கிருந்த மகாத்மா காந்தி சிலையைக் காணவில்லை. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக போலீஸாரிடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, மாயமான மகாத்மா காந்தி சிலையைக் கண்டுபிடித்து, மீண்டும் கோயிலில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது புதிய காந்தி சிலையை நிறுவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com