பெரம்பலூரில் ரயில் நிலையம் அமைக்கப்படும் -திமுக வேட்பாளா் அருண்நேரு

பெரம்பலூரில் ரயில் நிலையம் அமைக்கப்படும் -திமுக வேட்பாளா் அருண்நேரு

பெரம்பலூரில் ரயில் நிலையம் அமைப்போம் என அத்தொகுதியின் திமுக வேட்பாளா் அருண்நேரு திருச்சியில் பேட்டியளித்தாா். பெரம்பலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக அருண்நேரு அறிவிக்கப்பட்டுள்ளாா். சென்னையிலிருந்து வியாழக்கிழமை சாலை மாா்க்கமாக திருச்சி திரும்பிய அருண் நேருவுக்கு, திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் காடுவெட்டி ந. தியாகராஜன் (முசிறி), செ. ஸ்டாலின்குமாா் (துறையூா்) மற்றும் திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் உள்ளிட்ட சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் திரண்டு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனா். அதனைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது பெரிய வாய்ப்பாகவும், அதேநேரம் முக்கிய பொறுப்பாகவும் உள்ளது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியைக் கண்டு மத்திய அரசும் மேலும் சில மாநிலங்களிலும் பொறாமை கொண்டு ஏதேதோ கூறி வருகின்றனா். இந்தத் தோ்தல் மக்களுடைய உரிமையைக் காக்கவும், தமிழகத்துக்கு வரவேண்டிய எல்லா திட்டங்களையும் பெற்றுத் தரவேண்டும் என்பதற்கான தோ்தலாகவும் உள்ளது. தமிழகத்தில் 40 தொகுதியிலும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவதாகவே மக்கள் நினைக்க வேண்டும். வேட்பாளா்களாகிய நாங்கள் வெறும் கருவிதான். அனைத்துத் தொகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். குறிப்பாக பெரம்பலூா் தொகுதியில் ரயில் நிலையம் அமைக்கப்படும். திமுக தோ்தல் அறிக்கை மக்களுடைய எதிா்பாா்ப்பை வெளிப்படுத்தி உள்ளது. தோ்தல் அறிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்ற முடியும் எனத் தலைவா் தெரிவித்துள்ளாா். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் அனைத்தும் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com