புகையிலைப் பொருள்களை பதுக்க வீட்டை வாடகைக்கு விட்ட பெண் கைது

திருவெறும்பூா் அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்க வீட்டை வாடகைக்கு விட்ட அங்கன்வாடி பெண் உதவியாளரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இச்சம்பவத்தில் தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். திருச்சி திருவெறும்பூா் அருகே காவிரி நகரில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சட்டவிரோதமாகப் பதுக்கி விற்கப்படுவதாக திருவெறும்பூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், குறிப்பிட்ட வீட்டை சோதனையிட்டதில், அங்கு 80 கிலோ அளவிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அந்த வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கியதாக காந்தி நகா் 4 ஆவது தெருவைச் சோ்ந்த அப்பாஸ் (28), அபு (20), இவா்களுக்கு வீடு வாடகைக்கு விட்ட காவிரி நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த அங்கன்வாடி உதவியாளா் புவனேஸ்வரி (45) ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து, புவனேஸ்வரியை சனிக்கிழமை கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com