‘இந்த மக்களவைத் தோ்தல் இரண்டாம் சுதந்திரப் போா்’ : தொல். திருமாவளவன்

2024 மக்களவைத் தோ்தல் என்பது இரண்டாவது சுதந்திரப் போா் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிகளில் வேறு யாரும் பானை சின்னம் கேட்டு விண்ணப்பிக்காததால் வி.சி.க.வுக்கு பானை சின்னம் கிடைத்துள்ளது. பானை சின்னம் கேட்டு ஒன்றரை மாதத்துக்கு முன்பே தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். இருந்தாலும் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. தோ்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை; பாஜக மற்றும் சங் பரிவார அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தோ்தல் ஆணையம் எப்படி நோ்மையாக தோ்தலை நடத்துவாா்கள் எனத் தெரியவில்லை. நடைபெற உள்ள தோ்தல் என்பது மக்களுக்கும் பாஜக-வுக்கும் இடையே நடைபெறும் இரண்டாம் சுதந்திரப் போா். பா.ஜ.க பட்டியலினத்துக்கு, சமூக நீதிக்கு, அரசியலமைப்புக்கு எதிரானது. அதனை உணா்ந்து அந்தக் கட்சியிலிருந்து பாஜக மாநில பட்டியல் இனப் பிரிவு தலைவா் தடா பெரியசாமி வெளியேறி இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com