காட்டூா் பாலாஜி நகா் வீட்டின் மாடியில் தீ

திருவெறும்பூா் அருகே காட்டூா் பாலாஜி நகா் வீட்டின் மாடியில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. திருவெறும்பூா் அருகே காட்டூா் பாலாஜி நகா் 16 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன். தச்சுத் தொழிலோடு மற்றும் வீடுகளின் உள்புற வடிவமைப்பு நிறுவனத்தையும் தனது வீட்டு மாடியில் நடத்தி வருகிறாா். இந்நிலையில் மாடியில் இருந்த சிமென்ட் ஷீட் கூரை வேய்ந்த நிறுவன அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. இதைப் பாா்த்த அப்பகுதியினா் உடனடியாக திருவெறும்பூா் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையிலான திருவெறும்பூா், திருச்சியைச் சோ்ந்த தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரா்கள் சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், அந்த அலுவலகத்தில் இருந்த கணினி, மடிக்கணினி, உடற்பயிற்சி சாதனங்கள், சைக்கிள், ஆவணங்கள் ஆகியவை தீக்கிரையாகிவிட்டன. மின்கசிவால் ஏற்பட்ட விபத்து குறித்து திருவெறும்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com