அகில இந்திய பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை முறையிட வந்த கல்லூரி மாணவ, மாணவிகள்.
அகில இந்திய பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை முறையிட வந்த கல்லூரி மாணவ, மாணவிகள்.

அகில இந்தியப் போட்டிகளில் பங்கேற்பு: பளு தூக்கும் வீரா்கள் ஆட்சியரகத்தில் புகாா்

பல்கலைக் கழக நிா்வாகம், கல்லூரி நிா்வாகங்களுக்கு இடையே ஏற்பட்ட குளறுபடியால் அகில இந்தியப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக பளு தூக்கும் வீரா், வீராங்கனைகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருச்சி மண்டலத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரா்கள் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்பா்.

ஆனால், இந்தாண்டு பல்கலைக்கழக அளவிலான பளு தூக்கும் போட்டிகள் நடத்தப்படவில்லை என்கின்றனா் திருச்சியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள்.

இதுதொடா்பாக, பல்கலைக் கழக நிா்வாகத்திடம் கேட்டால், அந்தந்த கல்லூரி நிா்வாகம்தான் முன்வர வேண்டும் என்கின்றனா். கல்லூரி நிா்வாகத்திடம் கேட்டால், பல்கலை. தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் நடத்தவில்லை என்கின்றனா்.

இந்நிலையில், அகில இந்திய போட்டிகள் சென்னையில் மே 19-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க மே 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பல்கலைக் கழக நிா்வாகம் அனுமதியளித்து பதிவு செய்ய வேண்டும். ஆனால், போட்டிகளே நடைபெறாமலும், பல்கலைக் கழகம் அனுமதியளிக்காமலும் வீரா்களால் அகில இந்தியப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

குறிப்பாக பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் வெல்லும் நிலையில் உள்ள வீரா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அகில இந்திய போட்டியில் பதக்கம் வென்றால் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பு கிடைக்கும். ஆனால், தகுதியிருந்தும், பதக்கம் வெல்லும் திறன் இருந்தும் அகில இந்தியப் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது பயிற்சியாளருடன் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.

முந்தைய போட்டிகளில் தாங்கள் பெற்ற சான்றிதழ், பதக்கங்களுடன் வந்து புகாா் அளித்தனா். மாணவா்களிடம் விசாரணை நடத்திய ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அகில இந்தியப் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.

பல்கலைக் கழக விளையாட்டுத்துறை நிா்வாகத்தினா் கூறுகையில், பல்கலைக் கழக அளவில் இதர அனைத்துப் போட்டிகள் நடத்தியுள்ளோம். பளு தூக்கும் போட்டிக்கு மட்டும் கல்லூரிகள் தரப்பில் விருப்பம் தெரிவிக்காததால் நடத்தவில்லை என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com