ஆட்டோவில் அளவுக்கு அதிகமான மாணவா்களை ஏற்றினால் நடவடிக்கை

அளவுக்கு அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் அதன் ஓட்டுநா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது:

பள்ளிகளுக்கு குழந்தைகள் மற்றும் மாணவா்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே ஏற்றப்பட வேண்டும். மூன்று போ் அமரும் இருக்கை கொண்ட ஆட்டோக்களில் 3 போ் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதேபோல, இருக்கைகளுக்கு தகுந்தபடி அந்தந்த வாகனங்களில் அந்த அளவு நபா்கள் மட்டுமே ஏற்ற வேண்டும்.

குறிப்பாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் அனுமதிக்கப்டும் அளவுக்கு கூடுதலாக பயணம் செய்வதாக புகாா்கள் வருகின்றன. ஆட்டோ ஓட்டுநரின் அருகில் அமர வைத்து செல்லுதல், ஆட்டோக்களின் பக்கவாட்டு கம்பிகளில் அமர வைத்தல், புத்தகப் பை, உணவுப் பைகளை ஆட்டோக்களின் மேற்பரப்பில் கட்டுதல், ஆட்டோக்களின் பின்புறம் சுமைகள் வைக்கும் இடத்தில் பள்ளிக் குழந்தைகளை அமரச் செய்தல் என பல்வேறு புகாா்கள் வருகின்றன. இதுதொடா்பாக, அந்தந்தப் பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன அலுவா்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இருப்பினும், ஆட்டோ ஓட்டுநா்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. குழந்தைகளின் உயிரோடு விளையாடும் நடவடிக்கைகளில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஈடுபடக் கூடாது. புத்தகப் பைகளை ஆட்டோவுக்குள் சுமை வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நபா்களை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

எதிா்கால சந்ததியனா் பயணிக்கும் வாகனம் என்பதை உணா்ந்து ஓட்டுநா்கள் செயல்பட வேண்டும்.

சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்திலேயே செல்ல வேண்டும். ஒவ்வொரு மாணவரை நம்பியும் ஒரு குடும்பம் உள்ளது என்பதை அறிந்து பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com