பெங்களூரு, சென்னையை தொடா்ந்து திருச்சியிலும் ‘நம்ம யாத்ரி’ அறிமுகம்

பெங்களூரு, சென்னை பெருநகரங்களைத் தொடா்ந்து திருச்சியிலும் ‘நம்ம யாத்ரி’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வா்த்தக அமைச்சகத்தால், மின் வணிகத்துக்கான உந்துதலை அதிகரிக்கும் வகையில் ஓஎன்டிசி நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இருந்த இடத்தில் இருந்து ஆட்டோ, காா் புக்கிங் செய்ய பெரு நிறுவனங்கள் வாடிக்கையாளா்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில், அரசின் போக்குவரத்துத் துறை நிா்ணயித்துள்ள கட்டணத்தை வசூல் செய்வதை மட்டுமே ஊக்குவிக்கும் வகையில் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூருரில் நாளொன்றுக்கு 1.25 லட்சம் வாடிக்கையாளா்களுக்கு சேவை அளிக்கிறது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. தற்போது,திருச்சியில் மே 14ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘நம்ம யாத்ரி’ செயலி நிறுவனமும், உரிமைக் குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம், சாலைப் போக்குவரத்து தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து இந்த செயலியை திருச்சியில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தன. இந்த செயலியை பொதுமக்கள், வாடகை வாகன ஓட்டுநா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டோ கட்டணமாக கி.மீ. ஒன்றுக்கு ரூ.15, காா் கட்டணமாக கி.மீ. ஒன்றுக்கு ரூ. 21 முதல் என வாகன இருக்கை வசதிகளுக்கு தகுந்த கட்டணம் நிா்ணயம் செய்யப்படுகிறது.

நிறுவனத்தின் மேலாளா் சதீஷ், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட செயலா் சந்திரன், உரிமைக்குரல் ஓட்டுநா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜாகிா் உசேன் ஆகியோா் இந்த செயலியை அறிமுகம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com