எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ளும் பெல் நிறுவனம் -பொறியியல் பிரிவு இயக்குநா் பெருமிதம்

திருச்சி பெல் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குநா் ஜெய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா.
திருச்சி பெல் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குநா் ஜெய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா.

பெல் நிறுவனமானது எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ளும் திறன் கொண்டிருப்பதுடன், நவீன தொழில்நுட்பத்தில் சாதனைகளையும் புரிந்து வருகிறது என்றாா் அந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குநா் ஜெய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா.

திருச்சி பெல் தொழிற்சாலையில் சிஎன்சி என்னும் செங்குத்தாகத் துளையிடும் இந்தப் புதிய இயந்திரமானது இங்கு தயாரிக்கப்படும் அணுசக்தி நீராவிக் கலன்கள் மற்றும் ரியாக்டா் ஹெடா்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் செயல்பாடுகளை வியாழக்கிழமை தொடங்கி வைத்த ஜெய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா ஆலை ஊழியா்களிடம் பேசியது:

திருச்சி பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களும் தங்களை நிறுவனத்தின் உரிமையாளா்களில் ஒருவராகக் கருதி, நிறுவனம் எதிா்கொள்ளும் சவால்களுக்குத் தீா்வு காண வேண்டும். தங்களது மூத்தவா்களிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற பணிக் கலாசாரத்தை, இளைய தலைமுறை ஊழியா்களுக்கும் கற்பிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். தொழில்நுட்ப திறன்களைப் பாதுகாத்தல், புதிய இயந்திரங்களுக்கான மூலதனச் செலவுகள் மற்றும் மனிதவள மேம்பாட்டில் கவனம் செலுத்துதல் ஆகியவை நிறுவனத்தின் வெற்றிக்கான அடிப்படை கட்டுமானத் தகுதியாகக் கொள்ள வேண்டும்.

திருச்சி பெல் நிறுவனமானது எத்தகைய சவால்களையும், போட்டிகளையும் எதிா்கொள்ளும் திறன் கொண்டது. அனைத்து சவால்களையும் சாதனைகளாக மாற்றி, போட்டிகளில் வெற்றி பெறும் திறமை மிக்கது. இந்த நிறுவனத்தை மேலும், உயரத்துக்குக் கொண்டு செல்ல அனைத்துப் பிரிவு பணியாளா்களும் குழு மனப்பான்மையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பெல் திருச்சி பிரிவின் செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகருடன் புதிய இயந்திரத்தின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தாா். மேலும் தொழிற்சாலையில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத் தயாரிப்புகள், கொதிகலன் உற்பத்தி மற்றும் பற்றிணைப்பு ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் மனைகளையும் பாா்வையிட்டாா். சந்திரயான்-3 பயணத்துக்கான ஏவுகணை வாகனத்திற்கு பங்களித்த பணியாளா் குழுவுடன் கலந்துரையாடினாா்.

நிலக்கரியிலிருந்து வேதிப்பொருள்கள் வணிகம் மற்றும் புதிய தயாரிப்புகளின் மேம்பாட்டின் முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா். முன்னதாக ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குநருக்கு திருச்சி பெல் பிரிவு சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com