நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தோா் புகாா் அளிக்கலாம்

திருச்சி, மே 16: திருச்சியில் செயல்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தோா் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீலில் புகாா் அளிக்கலாம்.

இதுகுறித்து திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தது:

திருச்சி பாலக்கரை எடத்தெருவில் வசிக்கும் கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் சோ்ந்து அவா்களுக்கு சொந்தமான இடத்தில் பொன்மகள் என்ற பெயரில் நிதி நிறுவனமும், பா்னிச்சா் மாா்ட் ஆகியவற்றையும் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வந்தனா்.

இந்நிலையில் இருவரும் திருச்சி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சுந்தர்ராஜ் என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தை கூறினா். இதை நம்பிய சுந்தர்ராஜ் தனது பெயரிலும், தனது மகன்கள் பெயரிலும் 4 சீட்டுகளில் சோ்ந்து மொத்தம் ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 750 முதலீடு செய்தாா்.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கண்ணன் இறந்துவிட்டதால் நிதி நிறுவனத்திலிருந்து வாங்கிய முதலீடுகளுக்கு உரிய தொகை வாடிக்கையாளா்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட சுந்தர்ராஜ் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் கொடுத்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். மேலும் இதுதொடா்பாக திருச்சி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

எனவே பொன்மகள் எண்டா்பிரைசஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் இருந்தால் அசல் ஆவணங்களுடன் திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகாா் கொடுக்கலாம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com