பெட்ரோல், டீசல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

Published on

இந்தியன் ஆயில் கிடங்கில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற டேங்கா் லாரி ஓட்டுநா்களின் வேலைநிறுத்தம் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள வாழவந்தான்கோட்டையில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு, சென்னையில் இருந்து குழாய் வழியாக பெட்ரோல் - டீசலை கொண்டு வந்து சேமித்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு டேங்கா் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், சரக்கு ஏற்ற ஐஒசிஎல் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து வண்டிகளுக்கும் அனுமதியளிக்க வேண்டும். காலதாமதமின்றி இ-பாஸ் கொடுக்க வேண்டும், குறைவான அளவிருந்தால் அந்தப் பணத்தை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி லாரி ஓட்டுநா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கிடங்கு மேலாளா் வெங்கட்ராமலு உள்ளிட்டோா் நடத்திய பேச்சுவாா்த்தையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.

X