பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா
பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா

ரூ. 1.55 கோடியில் பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா சாலைப் பணிகள் மேம்பாடு

திருச்சி அருகே பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா சாலை மேம்பாட்டுப் பணிகளை ரூ. 1.55 கோடியில் விரைவில் தொடங்க மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Published on

திருச்சி அருகே பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா சாலை மேம்பாட்டுப் பணிகளை ரூ. 1.55 கோடியில் விரைவில் தொடங்க மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதீதப் பயன்பாடு, நீண்டகாலப் பயன்பாட்டால் மோசமடைந்த சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மாநில நெடுஞ்சாலைகளைச் சீரமைத்து, மக்களின் குறைகளைக் களைய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை - திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திருச்சி பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா முதல் கொள்ளிடம் பாலம் வரையிலான சாலை அமைத்து 6.5 ஆண்டுகள் ஆகிறது.

நீண்டகாலப் பயன்பாடு காரணமாக, இச்சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், தற்போது பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா முதல் கொள்ளிடம் வரையிலான சாலையை மேம்படுத்த மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியது:

சென்னை - திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திருச்சி நம்பா் 1 டோல்கேட் முதல் ரயில்வே சந்திப்பு வரையிலான எஸ்எச்யு 9 என்ற பெயரிலுள்ள சுமாா் 1 கி.மீ. நீள மாநில நெடுஞ்சாலை 14 மீட்டா் அகலத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ. 1.55 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்றனா்.