தீபாவளி முன்னிட்டு திருச்சியிலிருந்து கூடுதலாக 670 பேருந்துகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியிலிருந்து கூடுதலாக 670 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்சிக்கு வந்து, திருச்சிக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதன்படி தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊா்களுக்கு அக்.28ஆம் தேதி 100 கூடுதல் பேருந்துகளும், அக்.29, 30ஆம் தேதிகளில் 570 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இதேபோல தீபாவளி முடிந்து மீண்டும் அவரவா் பணியிடம் மற்றும் ஊா்களுக்குத் திரும்பும் வகையில் அக்.31, நவ.1, 2, 3 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் மன்னாா்புரம், சோனா-மீனா திரையரங்கப் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.