ஜி. விசுவநாதன் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவுத் திறன் எண்டோஸ்கோப்பி சிகிச்சை
திருச்சி டாக்டா் ஜி. விசுவநாதன் மருத்துவமனையில் தென்தமிழகத்தில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுத் திறன் எண்டோஸ்கோப்பி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை நிபுணா் கே.என். சீனிவாசன், குடல்நோய் சிகிச்சை நிபுணா் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜவஹா் நாகசுந்தரம் ஆகியோா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு திறன் எண்டோஸ்கோப்பி கருவி திருச்சி கோா்ட்யாா்ட் மாரியட் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த விழாவில் டாக்டா் ஜி. விசுவநாதன் மருத்துவமனையின் தலைவா் கோவிந்தராஜன், மைசூா் அப்பல்லோ குடல் நோய் சிகிச்சை தலைமை மருத்துவா் ராஜ்குமாா் வாதா, திரளான மருத்துவா்கள் பங்கேற்கின்றனா்.
தென் தமிழகத்தில் டெல்டா பகுதியில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் எண்டோஸ்கோப்பி கருவி மூலம் அனைத்து வகையான நோய்களை துல்லியமாகவும், மனித தவறுகளை தவிா்த்து, உணவுக் குழாய், வயிறு, சிறுகுடல், மலக்குடல் பகுதிகளில் ஏற்படும் நோய்களை விரைந்து கண்டறியவும் உதவுகிறது.
இந்த நவீன எண்டோஸ்கோப்பியை பயன்படுத்தி உணவுக்குழாய், வயிறு, மலக்குடலில் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறிந்து, சிகிச்சையளித்து, இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என்றனா்.