திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் : திருச்சி சிறைக்காவலா் சேலம் சிறையில் அடைப்பு
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் திருநங்கையை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவகாரம் தொடா்பாக சிறைக்காவலரை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த திருநங்கை சாரங்கன் (32). கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவருக்கு சிறை தலைமைக் காவலா் மாரீஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து, திருச்சி கேகே நகா் போலீஸாாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக புகாா் அளித்தும் சிறைத்துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லையென, திருநங்கை சாரங்கன் தனது வழக்குரைஞா் உதவியுடன் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் முறையிட்டாா். அதன்பேரில், திருச்சி மத்திய சிறை டிஐஜி ஜெயபாரதி, மற்றும் சிறை கண்காணிப்பாளா் (எஸ்பி) ஆண்டாள், சிறை (தலைமைக்) காவலா் மாரீஸ்வரன் உள்ளிட்டோரை கடந்த ஜூலை 11 ஆம் தேதி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் உத்தரவிட்டாா். தொடா்ந்து ஜூலை 21 ஆம் தேதி காவலா் மாரீஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக கே.கே. நகா் காவல் ஆய்வாளா் கோசலராமன் தலைமையிலான போலீஸாா், சிறைக் காவலா் மாரீஸ்வரனை ஆகஸ்ட் 31-ஆம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். அவா் பணியாற்றிய சிறையிலேயே அவரை அடைக்கக் கூடாது என புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து, அவா் ஞாயிற்றுக்கிழமை (செப்.1) சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும் இந்த சம்பவம் தொடா்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரின் பேரில், கே.கே.நகா் ஆய்வாளா் அம்சவேணி அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.