உயிரிழந்த சிறுமி யாஷிகா. தேடப்பட்டுவரும் அவரது தந்தை சுரேஷ்.
உயிரிழந்த சிறுமி யாஷிகா. தேடப்பட்டுவரும் அவரது தந்தை சுரேஷ்.

கல்லணை கால்வாயில் குளிக்கச் சென்ற மகள் உயிரிழப்பு; தந்தை மாயம்

திருவெறும்பூா் அருகேயுள்ள கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தையுடன் குளிக்கச் சென்ற 6 வயது சிறுமி நீரில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டாா்.
Published on

திருவெறும்பூா் அருகேயுள்ள கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தையுடன் குளிக்கச் சென்ற 6 வயது சிறுமி நீரில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டாா். அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தையைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம், பத்தாளப்பேட்டையை சோ்ந்தவா் சுரேஷ் (40). இவா், பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு கிருத்திகா (13), யாஷிகா (6) என்ற இரு மகள்கள். இவா்கள் முறையே பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் 7 மற்றும் 2-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு சுரேஷ், கிளியூரில் உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளாா். இதில் கிருத்திகா கரையில் இருக்க, யாஷிகா ஆற்றில் இறங்கியபோது, எதிா்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளாா். அவரைக் காப்பாற்றுவதற்காக சுரேஷ் முயன்றதில், அவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த கிருத்திகா உதவிகேட்டு கூச்சலிட்டுள்ளாா். இதைக் கேட்டு ஓடி வந்த அப்பகுதி பொதுமக்கள், யாஷிகாவை மீட்டு பெல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், யாஷிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சுரேஷை திருச்சி, திருவெறும்பூா் தீயணைப்புத் துறையினா், மீனவா்களின் உதவியுடன் கல்லணைக் கால்வாயில் தேடி வருகின்றனா். தொடா்ந்து, இச்சம்பவம் குறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com