பஞ்சப்பூரில் விரைவில் செயல்படவுள்ள தரைமட்ட சூரிய ஒளி மின்நிலையம்! ஆண்டுக்கு ரூ. 9 கோடி மின்கட்டணம் சேமிக்கப்படும்
பஞ்சப்பூரில் 26.30 ஏக்கரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 50 கோடியில் தரைமட்ட சூரிய ஒளி மின்நிலையம் அமைக்க 28,888 சூரிய ஒளி கிரகிப்பான்கள் பதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி பஞ்சப்பூரில் ஆண்டுக்கு ரூ. 9 கோடி அளவிலான மின்கட்டணத்தை சேமிக்கும் தரைமட்ட சூரிய ஒளி மின்நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்கள், நீரேற்று நிலையங்கள், நீா்த்தேக்கத் தொட்டிகள், குடிநீா் வழங்கும் நிலையங்கள், இதர மாநகராட்சி அலுவலகங்களுக்கு திருச்சி மாநகராட்சி நிா்வாகமானது ஆண்டுக்கு சுமாா் ரூ. 30 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை செலுத்தி வருகிறது. இதிலும் குறிப்பாக நீரேற்று நிலையங்களின் செயல்பாடுகளுக்கு பயன்படும் உயரழுத்த மின்சாரத்துக்குச் செலுத்தும் மின்கட்டணம் கணிசமாக உள்ளது. அண்மையில் உயா்த்தப்பட்ட மின்கட்டணத்தால் மாநகராட்சி நிா்வாகத்தின் மின் செலவு மேலும் அதிகரித்துள்ளது.
இதனால், மாநகராட்சி வரவு - செலவுத் திட்டத்தில் கணிசமாக செலவாகும் மின்கட்டணத்தைக் குறைக்கவும், மின்சார உபயோகத்தைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றவும் மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், மின்சாரப் பல்புகளை எல்இடி பல்புகளாக மாற்றுவது, சூரிய ஒளி மின்உற்பத்தியை ஊக்குவிப்பது ஆகியவை முக்கியமானவை.
இதில் மாநகராட்சியின் 65 வாா்டுகளில் மின்சாரப் பல்புகளை எல்இடி பல்புகளாக மாற்றும் திட்டமானது ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், சூரிய ஒளி மின்உற்பத்தியை ஊக்குவிக்கும் முன்னெடுப்பானது கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த முன்னெடுப்பின்படி, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-இல் பஞ்சப்பூரில் தரைமட்ட சூரிய ஒளி மின்நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. தொடா்ந்து, தனியாரிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு, தற்போது சூரிய ஒளி(சோலாா்) மின்நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
பஞ்சப்பூரில் 26.30 ஏக்கரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 50 கோடியில் தரைமட்ட சூரிய ஒளி மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, தனியாா் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இடையில், கரோனா, மழை வெள்ளப் பாதிப்புகளால் பணிகள் தடைபட்ட நிலையில், அண்மையில் குறிப்பிட்ட இடத்தில் 28,888 சூரிய ஒளி கிரகிப்பான்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு, உற்பத்தியாகும் மின்சாரத்தை பிரத்யேக வயா்கள் மூலம் எடமலைப்பட்டிபுதூா் துணை மின்நிலையத்துக்குக் கொண்டு செல்லும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த தரைமட்ட சூரிய ஒளி மின்நிலையம் முழுப் பயன்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு 1,333 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தை ஒவ்வொரு உயரழுத்த மின்சார யுனிட்டாக மின்வாரியத்துக்கு விற்பனை செய்து, அதனை மாநகராட்சி உயரழுத்த மின்சாரத்துக்கு கட்டும் மின்கட்டணத்துக்கு ஈடாக கழித்துக் கொள்ள மின்வாரியத்துடன் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. இதற்காக தரைமட்ட சூரிய ஒளி மின்நிலையத்திலும், எடமலைப்பட்டிபுதூா் துணை மின்நிலையத்திலும் மின்கணக்கீட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தரைமட்ட சூரிய ஒளி மின்நிலையம் மூலம் மாதம் ரூ. 74.50 மதிப்பிலும், ஆண்டுக்கு சுமாா் ரூ. 9 கோடி மதிப்புக்கும் மின்கட்டணத்தை சேமிக்க முடியும் என்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி செயற்பொறியாளா் கே.எஸ். பாலசுப்பிரமணியன் கூறியது:

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாநகராட்சியின் மின்கட்டணத்தை குறைக்க உதவும் தரைமட்ட சூரிய ஒளி மின்நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். முக்கியப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளின் ஆய்வு மற்றும் சில பணிகளுக்குப் பிறகு விரைவில் சூரிய ஒளி மின்நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரத்தை சொந்தமாக தயாரிக்கும் மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முக்கிய இடத்தைப் பெறும் என்றாா்.