பழையக்கோட்டை - மணப்பாறை பேருந்துச்சேவை மீண்டும் தொடக்கம்
மணப்பாறை அடுத்த பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறை வரையிலான பேருந்து வழித்தட சேவை செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிவைக்கப்பட்டது.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறை வரை இயங்கி வந்த நகரப் பேருந்து வழித்தடம் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயங்காமல் இருந்து வந்தது. பலமுறை இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் அந்தப் பேருந்தை இயக்கிட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை இந்து மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத் தலைவா் ராஜா மற்றும் புறநகா் மாவட்ட இளைஞரணி செயலா் சங்கா் ஆகியோா் தலைமையில் பழையக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடா்ந்து நடைபெற்ற சமரசப் பேச்சுவாா்த்தையின்படி, செவ்வாய்க்கிழமை பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறை வரையிலான புதிய பேருந்து வழித்தட சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பேருந்தை இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் ஆகியோா் வரவேற்றனா்.